மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


மிஸ். தமிழ் பாடல்கள்
2012/02/01

எல்லோரும் பாட்டெழுத நான்ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்படி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான்ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் ...

—சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்கள்
((யதிவழு) பஃறொடை வெண்பா)

என்ற பாடலைப் படித்து உணர்ச்சிவசப்பட்டு, இலக்கணப் புத்தகம் வாங்கக் கடைக்குச் சென்றேன். அங்கே புத்தகத்தோடு, குடிக்கக் கொஞ்சம் குளிர்ந்த மோரும் கொடுத்து வழியனுப்பினர்.

(பத்து ஆண்டுகள் கழிந்தன.)

சமீபத்தில் ஓரிரவு புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்த பொழுது அப்புத்தகம் மீண்டும் தென்பட்டது. வாசிக்க ஆரம்பித்தேன். சில செய்யுட்களும் எழுதிப் பார்த்தேன். அவற்றை மாதமொன்றாய் இத்தளத்தில் வெளியிடுகிறேன். இப்பொழுதே கைகளைத் தூக்கி விடுகிறேன்: என்னுடைய அழகுணர்ச்சி சந்தேகத்துக்குரியது. எடுத்துக்காட்டாய் எனக்கு மிகவும் பிடித்த காளமேகம் செய்யுள் ஒன்று:

ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு ஏழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்று - பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
னாறுபதி னேழ்பதி னெட்டு

—காளமேகம்
(நேரிசை வெண்பா)

ஆம், வெண்டளை பிறழாது ஒன்று, இரண்டு, மூன்று எனப் பட்டியலிடுகிறார்.

"மிஸ். தமிழ் பாடல்கள்" என்ற (சுஜாதாவிடம் இருந்து சுட்ட) தலைப்பில் நான் எழுதும் இப்பாடல்களில் முக்கியக் குறிக்கோள் இலக்கண அமைதியே. இவற்றில் சந்திப் பிழை தொட்டு எந்தப் பிழை கண்டாலும் mstamil@mstamil.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்—திருத்திக்கொள்கிறேன், நன்றி.

(செய்யுள் நடையில் முன்னுரை இங்கே.)