கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
2012/05/02
காளமேகப் புலவர் எனக்குப் பள்ளியில் அறிமுகம். 15-ஆம் நூற்றாண்டுக்காரர் என்றாலும், அவரது பாடல்கள் ஒவ்வொன்றும்— கம்பனை வம்புக்கிழுப்பதாகட்டும், சிவனுக்கு அரைக்கண் என்று நிறுவுவதாகட்டும், பொழுது போகாமல் 1, 2, 3 என்று வெண்டளை பிறழாமல் வரிசைப் படுத்துவதாகட்டும்—வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கமெண்ட் அடித்தது போல் தான் இருக்கும். அவருடைய தனிப்பாடல்களை நண்பர்களுடன் வாசித்துப் பாருங்கள் — guaranteed fun.
அவர் மோர்க்காரியைக் கிண்டல் அடித்த பாடல் பிரசித்தம். அதே தொனியில் மற்றொரு பாடல் இதோ:
வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் — நேற்றுக் கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று பழுதைஎடுத்(து) ஓடிவந்தான் பார். —காளமேகம் (இன்னிசை வெண்பா)
இந்த மாதத்திற்கான பாடல், மேற்கண்ட வெண்பாவை ஒட்டி எழுதியது தான்.